அரசியல்வாதிகளுக்கு அக்கறையும், மனிதாபிமானமும் முக்கியம் என்பதை அன்புக்கரங்கள் திட்டம் எடுத்துக்காட்டுகிறது என மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம் கொண்டார்.

Published Date: September 15, 2025

CATEGORY: FEDERALISM

அரசியல்வாதிகளுக்கு அக்கறையும், மனிதாபிமானமும் முக்கியம் என்பதை அன்புக்கரங்கள் திட்டம் எடுத்துக்காட்டுகிறது என மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம் கொண்டார்.

அன்புக் கரங்கள் திட்டம் - தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
 
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசின் “தாயுமானவர்“ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் லேடி டோக் பெருமாட்டி கல்லூரி கூட்டரங்கில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன் குமார் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினர்.
 
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் - பேச்சு
 
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.., "அரசியல்வாதியாக இருப்பவர்களுக்கு எப்போதுமே அக்கறை மனித நேயம் ஆகியவை தேவை. அதன் பின்னர் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறபோது அதற்குரிய தகவல்களை திரட்டி, அதற்கான திட்டங்களை தீட்டி அந்த திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்யக்கூடிய செயல்பாட்டுத் திறன் தேவை. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முதலமைச்சர், மாணவர்கள் நலனில் தனித்த அக்கறை கொண்டு பல்வேறு மனிதநேய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனை செயல்படுத்துவதற்கு முறையாக நிதியினை ஒதுக்கி செயல்பாட்டுத் திறனையும் ஆய்வு செய்து வருகிறார். இது போன்ற நல்ல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிடும் வாய்ப்பை நிதி அமைச்சராக இருக்கும்போது பெற்றுள்ள நான், தற்போது தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக இதற்கான டேட்டாக்கள் அனைத்தும் TNEGA மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு மாணவர்களுக்கு பலன் சென்று சேர்வது உள்ளபடியே தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறினார்‌.

Media: ABP News